Thursday, February 19, 2015

கூடுதலாக 450 மருத்துவ இடங்களைப் பெற தமிழக அரசு முயற்சி: எம்.சி.ஐ. அனுமதி கிடைக்குமா?
தமிழகத்தில், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், சென்னை எம்.எம்.சி., - 250; ஸ்டான்லி - 250; மதுரை - 155 உட்பட மொத்தம் 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.
சுயநிதி கல்லூரிகளில், ஒரு இடத்திற்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. புதிதாக துவங்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் உட்பட, அரசு மருத்துவக் கல்லூரியில், வரும் கல்வியாண்டில் 450 எம்.பி.பி.எஸ்., இடங்களை கூடுதலாக்க, அரசு முயற்சித்துள்ளது. எம்.சி.ஐ., அனுமதி கோரப்பட்டுள்ளது.
கூடுதல் இடங்களை அனுமதிக்கும் அளவில் போதிய வசதிகள் உள்ளதா என எம்.சி.ஐ., ஆய்வுப் பணியைத் துவங்கி உள்ளது. ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரியிலும் ஆய்வு முடிந்துள்ளது.
ஓமந்தூரார் கல்லூரிக்கு, கட்டமைப்பு பணி இன்னும் முடியவில்லை எனவும், கோவையில், போதிய பேராசிரியர், பணியாளர் இல்லை. மாணவர் விடுதிகளிலும் போதிய வசதிகள் இல்லை என, குறைகளை சுட்டிக்காட்டி உள்ளது. இதனால், இந்த கல்லூரிக்கான கூடுதல் இடங்களுக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அரசு முயற்சி
இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறியதாவது: கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி களில் 350 இடங்களும், ஓமந்தூரார் கல்லூரியில் 100 இடம் என 450 கூடுதல் இடங்களைப் பெற, அரசு முயற்சித்து வருகிறது.
எம்.சி.ஐ., ஆய்வுசெய்து, சுட்டிக்காட்டும் குறைகளை சரிசெய்து, முறையாக அனுமதி பெறுவோம். முடிந்த அளவு, வரும் கல்வி ஆண்டிலேயே கூடுதல் இடங்களுக்கு சேர்க்கும் வகையில் முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் இடங்கள் எங்கே?
கல்லூரி - பழைய இடம் - கூடுதல் இடம் - மொத்தம்
கோவை - 150 - 100 - 250
மதுரை - 155 - 100 - 255
நெல்லை - 150 - 100 - 250
கன்னியாகுமரி - 100 - 50 - 150
ஓமந்தூரார் - 100 - 100