Sunday, February 14, 2016

உயர்கல்வியில் தமிழகம் முதலிடம்: யு.ஜி.சி., துணைத்தலைவர் பாராட்டு

'முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அனுமதியளித்த சுயநிதிக்கல்லுாரிகள் திட்டத்தால், தமிழகம் உயர்கல்வித்துறையில் இன்றைக்கு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது,''
என பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) துணைத்தலைவர் எச்.தேவராஜ் பேசினார்.
நெல்லை பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: இந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த ஏற்ற சூழல் நிலவுகிறது. 1950 களில் யு.ஜி.சி., துவக்கப்படும்போது 70 பல்கலைக்கழகங்களும் 3 ஆயிரம் கல்லுாரிகளும் மட்டுமே இருந்தன. தற்போது 711 பல்கலைக்கழகங்களும், 40 ஆயிரத்து 760 கல்லுாரிகளும் உள்ளன.கல்லுாரிகள், பல்கலைகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இருப்பினும் கல்வித்துறையில் தனித்திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.
தனித்திறன் என்பது ஒவ்வொரு பல்கலையையும் பொறுத்து மாறுபடுகிறது.ஒவ்வொரு பல்கலையும் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆசிரியர் பணியை ஒரு வேலைவாய்ப்பாக மட்டுமே கருதக்ககூடாது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும்.
தமிழக வரலாற்றிலேயே ஒரு பல்கலையில் 800க்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெறுவது இங்கே சாத்தியமாகியிருக்கிறது.பல்கலை மானியக்குழு ஆண்டுதோறும்உயர்கல்வித்துறைக்கு 50 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குகிறது. இதில் 25 ஆயிரம் கோடிரூபாய் தேசிய உயர்கல்வி வளர்ச்சி ஆணையத்திற்கு (ஆர்.யு.எஸ்.ஏ) ஒதுக்கப்படுகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய பல்கலைகளுக்கு ஒதுக்கப்படுகிறது.எனவே இத்தகைய அதிக ஒதுக்கீட்டு தளத்தில் மாநில பல்கலைக்கழகங்களும் இடம்பெற வேண்டும்.
தமிழகம் முதலிடம்: தமிழகத்தில் 1985 ல் முதல்வர் எம்.ஜி.ஆர்., சுயநிதிக்கல்லுாரிகளை துவக்க அனுமதியளித்தார். இதன் மூலம் உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் பெற்றுவருகிறது. 2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய கல்வியாண்டுகளில் தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் தமிழகம் இந்தியாவிலேயே உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைமுதலிடம் பெற்று 42 சதவீதமாக உள்ளது. கல்விநிலையங்களின் விரிவாக்கத்தால் , தரம் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மத்திய அரசு உயர்கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது. காக்கிநாடா, வாரணாசி ஆகிய இடங்களில் ஆசிரியர் மேம்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.வெறும் பட்டத்தால் எந்த பயனுள்ளமில்லை. மாணவர்கள் தமது
தனித்திறனை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment